28/12/2024
கல்முனை சந்தாங்கேணி மைதானம், மருதமுனை 65 மீட்டர் வீட்டுத் தொகுதி மற்றும் சில வீதிகளின் வடிகான்கள் பாவனைக்கு விடப்பட்டன.!
கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானம், மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத் தொகுதி பிரதேசம், கல்முனை நகர மண்டப வீதி மற்றும் மாரியார் வீதி என்பவற்றில் அமைக்கப்பட்ட வடிகான் கட்டமைப்புகள்
இன்று பாவனைக்கு விடப்பட்டுள்ளன
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் தலைமையில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் குறித்த இடங்களுக்கு இன்று விஜயம் செய்து, இவ்வேலைத் திட்ட கட்டுமானங்கள் திருப்திகரமாக பூர்த்தி செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியிருந்தனர்.
கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம், மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத் தொகுதி மற்றும் மேற்படி வீதிகளும் வடிகான் கட்டமைப்புகள் இன்மையால் மழை காலங்களில் வெள்ளத்தில் மூழ்கி, அனர்த்தங்களை எதிர்நோக்கியிருந்தன.
இவற்றைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபையின் முன்னுரிமைப்படுத்தப்பட்ட துரித வேலைத் திட்டத்தின் கீழ் மாநகர சபை நிதியின் மூலம் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் மற்றும் மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத் தொகுதி பிரதேசம் என்பவற்றுக்கு வடிகான்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை கல்முனை மாநகர சபையின் முன்னுரிமைப்படுத்தப்பட்ட துரித நடவடிக்கையினால் LDSP மற்றும் PSDG திட்டங்களின் கீழ் மேற்படி இரு வீதிகளுக்கான வடிகான்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.