04/10/2024
கல்முனை மாநகர சபையின் வருமானத்தை அதிகரிக்க விசேட நடவடிக்கைகள் முன்னெடுப்பு.!*
கல்முனை மாநகர சபையின் வருமானத்தை அதிகரிக்க விசேட நடவடிக்கைகள் முன்னெடுப்பு.!*
கல்முனை மாநகர சபைக்கான வருமானங்களை அதிகரிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில் கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் அவர்களின் நெறிப்படுத்தலில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் ஓர் அங்கமாக கல்முனை மாநகர சபை ஆட்புல எல்லையினுள் மாநகர சபையின் வர்த்தக உரிமக் கட்டணம் மற்றும் சோலை வரி உள்ளிட்ட வருமானங்களை அறவீடு செய்வதற்காக வருமான பரிசோதகர்களுடன் இணைந்து செயற்படுவதற்காக வருமான சேகரிப்பு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் இலகுவாக அடையாளம் காண்பதற்காக மாநகர சபையினால் விசேட அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
குறித்த வருமான சேகரிப்பு உதவியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நெளபீஸ் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், நிதி உதவியாளர் யூ.எம். இஸ்ஹாக் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
வர்த்தகர்கள் தமது வியாபார நிறுவனங்களுக்கான வர்த்தக உரிமம் (Trade Licence) பெறுவதற்கான கட்டணங்கள் உள்ளிட்ட வரிகளை வருமான பரிசோதகர்களுடன் வருகின்ற குறித்த வருமான சேகரிப்பு உதவியாளர்களிடம் செலுத்தி உரிய பற்றுச் சீட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.
இதன் மூலம் கால நேர விரயங்களையும் தேவையற்ற அசெளகரியங்களையும் தவிர்ந்து கொள்ள முடியும்.
அதேவேளை தம்மால் செலுத்தப்பட்ட கட்டணங்கள், வரிகள் எதுவாயினும் வரவு வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்வதற்கான வசதிகள் மாநகர சபையின் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள நிதிப் பிரிவின் முகப்பு அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. கணினி உள்ளீடுகளுக்கு மேலதிகமாக புத்தகப் பதிவேடுகளும் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டுள்ளன.
வர்த்தகர்கள், பொது மக்கள் எவராயினும் அலுவலக நேரத்தில் நேரடியாக வந்து இவற்றை பரீட்சிக்க முடியும் என அறிவிக்கப்படுகிறது.